Thursday 12 February 2009

வவுனியா நலன்புரி முகாம்களில் நடப்பது என்ன? சிங்கள இராணுவத்தின் வெறியாட்டம்..!!

வன்னியில் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் படை நடவடிக்கைகளுக்குள் அகப்பட்டு அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு கொண்டுவரப்படும் தமிழர்கள் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் இளைஞர்கள், யுவதிகள் படையினரால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்படுகின்றனர். விசாரணைகளின் பின்னர் வவுனியா, அநுராதபுரம் மற்றும் சிங்கள கிராமங்களிலும் சாட்சியங்கள் இல்லாமல் படுகொலை செய்யப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்படுவதும், எரிக்கப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை பல நூறு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பல யுவதிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் குறித்த யுவதியும், யுவதியின் குடும்பத்தினரும் படையினரால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் ஏதிலிகள் நலன்புரி நிலையங்களுக்கு மீண்டும் கொண்டுவந்து விடப்படுகின்ற பரிதாபகரமான நிலையும் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களின் முன்னர் வவுனியாவில் இரு இளைஞர்கள் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்கள் அடையாளம் காண்பதைத் தவிர்ப்பதற்காக முகத்தில் '' டயர்கள் '' போட்டு எரியூட்டப்பட்டுள்ளனர். எரியூட்டப்பட்ட இரு இளைஞர்களும் வவுனிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.
வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு கொண்டுவரும் தமிழர்கள் மூன்று தொடக்கம் ஐந்து வரையான முட்கம்பித் தடைகளுக்குள் தங்கவிடப்பட்டுள்ளனர். அங்கிருப்பவர்களை உறவினர்கள் நெருங்கிப் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் முட்கம்பிக்கு வெளியே நின்று 5 நிமிடங்கள் மேல் உரையாட அனுமதிக்கபடுவதில்லை. தொலைபேசிகளிலும் உரையாட அனுமதிக்கப்படுவதில்லை.

வவுனியா நலன்புரி நிலையங்களில் இருக்கும் தமிழர்களின் உறவினர்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்து அவர்களுடன் தொடர்களை ஏற்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியால் உள்ள உறவினர்களும் அகதிகள் முகாமுக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களுடனும் தொலைபேசியில் உரையாடவும் அச்சப்படுவதால் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்படும் போதும் தொடர்புகளை அவர்கள் துண்டிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: