Monday 8 December 2008

விசேட அதிரடிப்படையின் வெறியாட்டம்!! மட்டக்களப்பில் ஊரடங்கின்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சுட்டுக்கொலை!!

மட்டக்களப்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களில் அரைவாசிபேர் விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் மிகவும் கொடுரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது எமக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவல் இது. இதன் உண்மைத் தன்மை தொடர்பாக நாம் ஆராய்ந்தபொழுது சில திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்தன.

மட்டக்களப்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. ஆனால் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளிலோ அவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடவோ எவருமே முன்வராதது கவலைக்குரிய விடையமாகும்.

கடந்த நவம்பர் மாதம் 29 ஆந்திகதி காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்போது நடத்தப்பட்ட தேடுதல்களில் மாவட்டத்தின் எட்டுப் பொலிஸ் பிரிவுகளிலும் 11,963 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் 124 பேர் தொடர்ந்தும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதில் கல்லடி பிரதேசத்தில் வீடு ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்ட 15 பிள்ளையான் குழு உறுப்பினர்களும் அடங்குவர்.

ஆனால் கடந்த ஐந்து நாட்களில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 124 இளைஞர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் மிகவும் கொடுரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது எமக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மேலும் ஆராய்ந்தபோது கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ்நிலையம் மற்றும் சிறைச்சாலைக்கு மட்டக்களப்பு லேக் வீதியிலுள்ள விசேட அதிரடிப்படை முகாமிலுள்ள கரன் என்ற விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர், விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவை சேர்ந்த சில்வெஸ்டர் ஆகியோருடைய தலமையில் சென்ற விசேட அதிரடிப்படையினர் ஊரடங்குச் சட்டத்தின்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களின் தகவல்களைப் பார்வையிட்டபின்னர் முக்கியமானசிலரை தெரிந்தெடுத்து தமது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸ்தரப்பு செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக நள்ளிரவு வேளைகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள இராணுவப் புலனாய்வு பிரிவினரின் முகாமிலிருந்தும், லேக் வீதியிலுள்ள விசேட அதிரடிப் படையினரின் முகாமிலிருந்தும் வெடியோசைச் சத்தங்கள் கேட்டன. அதை எவருமே அசட்டை செய்யாது விட்டாலும் நேற்றைய தினமும் அச்சத்தங்கள் கேட்டன. அப்பகுதிகளில் வசிக்கும் பிரதேசவாசிகளும் இதனை உறுதிப்படுத்தினர்.

ஆனால் இவ்வாறு ஊரடங்குச் சட்டத்தின்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக துணை ஆயுதக் குழுக்களை மேற்கோள்காட்டிய நம்பகமான செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. மேலும் அவர்களுடைய உடல்கள் இந்த இரண்டு முகாம்களுக்குள்ளேயே புதைத்துவைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கின்றது.

ஊரடங்கின்போது கைதுசெய்யப்பட்ட இளைஞர்களில் மிகவும் குறைவானவர்களே தற்பொழுது மட்டக்களப்பு பொலிஸ்நிலையத்திலும் சிறைச்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. மீதிப்பேரின் நிலை குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவை மேலும் தெரிவிக்கின்றன.

No comments: