Monday 26 January 2009

மகிந்தவின் அடுத்த குறி? தமிழ் ஆயுதக் குழுக்கள் மீதான வேட்டை!!!

புலி வேட்டையில் இறங்கி கணிசமான வெற்றிகளை பெற்று வருகின்ற மகிந்த தற்பொழுது தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக காட்டிக்கொடுக்கும் தமிழ் தேசவிரோதக் கும்பல்களையும் வேட்டையாட இறங்கியிருப்பதாக முக்கியமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு கட்டமாக கிழக்கில் இயங்கும் கருணாகுழு மற்றும் பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்களை போட்டுத் தள்ளுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் அனைத்தையும் பறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும். அடுத்தவாரமளவில் ஆயுதக் குழுக்களின் முகாம்களுக்குள் அதிரடியாக படைகளை இறக்கி ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை பிள்ளையான் குழு முக்கியஸ்தர்கள் சிலரை போட்டுத் தள்ளுவதன் மூலமோ அல்லது அவர்களை கைது செய்வதன் மூலமோ அந்தப் பழியை ஏனைய ஆயுதக் குழுக்கள் மீது போட்டு அவர்களை திசைதிருப்பி தமிழ் துணை ஆயுதக்குழுக்களிடையே பிளவுகளை உண்டாக்கி ஒவ்வொருத்தராக போட்டுத் தள்ளுவதற்கான சதுரங்க காய்நகர்த்தலை மேற்கொள்ள கோத்தபாயாவும், பசில் ராஜபக்ஸவும் திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடையம் தொடர்பாக முக்கியமான ஒரு தமிழ் அமைச்சருடன் இவர்கள் இது பற்றி கலந்துரையாடியிருப்பதாகவும் துணை ஆயுதக்குழுவை மேற்கோள்காட்டிய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இத்திட்டத்தின் ஒரு அங்கமாக கடந்த சனிக்கிழமை பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரும் கருணாவின் விசுவாசியுமான ருத்ரா மாஸ்டரை கைது செய்து போட்டுத் தள்ளுவதற்கான திட்டமொன்று தீட்டப்பட்டது. அதன்படி ருத்ரா மாஸ்டர் வழமையாக பயணிக்கும் நிசான் ரக வெள்ளைநிற காரை எதிர்பார்த்து மட்டக்களப்பு திருமலை வீதியில் காத்திருந்தனர் பொலிஸாரும் இராணுவத்தினரும். காலை 9 மணியளவில் ருத்ரா மாஸ்டரின் செங்கலடி முகாமிலிருந்து புறப்பட்ட கார் திருமலை வீதியை அடைந்ததும் எதிர்பார்த்திருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் காரை மறித்து சட்டவிரோதமான வாகனத்தில் சட்டவிரோதமான ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாக தமக்கு தகவல் வந்துள்ளதென்றும் உடனடியாக காரிலுள்ள ருத்ரா மாஸ்டரையும் ஏனையவர்களையும் கைது செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர்.
ஆனால் அங்கு ருத்ரா மாஸ்டர் இருக்கவில்லை. பதிலாக பிரபல கட்டட ஒப்பந்தக்காரரும் கருணாகுழுவின் முக்கிய உறுப்பினரும் பிள்ளையானின் வலது கையுமான கண்ணன் என்பவரே தனது சகாக்களுடன் இருந்துள்ளார். இதனால் கண்ணனையும் அவருடைய சகாக்களையும் பொலிஸார் கைது செய்தனர். பிள்ளையானும், கருணாவும் எவ்வளவோ முயன்றும் இன்று மாலையே கண்ணனும் சகாக்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலமாக தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தற்பொழுது எதுவுமே செய்யமுடியாமலிருக்கும் கருணா மற்றும் பிள்ளையான் குழு உறுப்பினர்கள் அனாவசியமாக வீதிகளில் திரிவதை தவிர்த்துள்ளதாகவும் தமது வழமையாக தொலைபேசி இலக்கங்களை அடிக்கடி மாற்றி வருவதாகவும் பிள்ளையான் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தமக்கு வேண்டிய ஒருவர் கைதுசெய்யப்பட்டால் இரண்டு மணித்தியாலங்களுக்குள் அவரை வெளியில் கொண்டுவர முடிந்த தம்மால் தற்பொழுது எதுவுமே செய்ய முடியவில்லையென இவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

No comments: