Monday, 17 November 2008

கடத்தப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர்களின் குடும்பங்கள் செங்கலடி கருணாகுழு முகாமில்..!! தற்பொழுது கிடைத்த செய்தி..!!

மட்டக்களப்பு பங்குடாவெளியிலுள்ள கருணா குழுவினரின் முகாம் கடந்த வியாழக்கிழமை தாக்குதலுக்குள்ளானமை யாவரும் அறிந்ததே. செங்கலடி- பதுளை வீதியில் பங்குடாவெளியிலுள்ள இந்த முகாம் செங்கலடியில் இருந்து மேற்கே 5 கிலோமீற்றர் தூத்திலும் மட்டக்களப்பு நகரத்திலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கருணா குழுவினரின் இந்த முகாமில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கருணா குழு உறுப்பினரான முகாம் பொறுப்பாளரும் மற்றொருவரும் உடனிருந்த பிள்ளையான் குழு உறுப்பினர்களால் உணவருந்திக்கொண்டிருந்த வேளை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்களை சுட்டுக் கொலைசெய்த 7 பிள்ளையான் குழு உறுப்பினர்களும் அங்கிருந்த ஆயுதங்களுடன் தலைமறைவாகியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை காலை எட்டுமணியளவில் கரடியனாறு சின்னக்கொலனி பகுதியில் வெள்ளைநிற டொல்பின் வானில் வந்த கருணாகுழுவினர் கருணா குழு உறுப்பினர்களை சுட்டுக்கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்ற பிள்ளையான் குழு உறுப்பினர்கள் 7 பேரில் இருவரது குடும்பங்களை கடத்திச்சென்றுள்ளனர்.

தற்பொழுது எமக்குக் கிடைத்த தகவல்களின்படி இவர்களை கடத்தப் பயன்படுத்தப்பட்ட (256-6212) இலக்கமுடைய வெள்ளைநிற டொல்பின் ரக வான் மட்டக்களப்பு- செங்கலடியிலுள்ள கருணாகுழுவினரின் முகாமில் நிறுத்தியுள்ளதுடன் கடத்தப்பட்ட 9 பேரும் நேற்று அதிகாலைவரை இந்த முகாமில் வைக்கப்பட்டிருந்ததாக நம்பகத்தன்மையான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முகாமுக்கு அருகில் 50 மீற்றர் தூரத்திலேயே ஈ.பி.டி.பி யினரின் முகாம் ஒன்றும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலப்போடி செங்கமலம் (வயது40),சிவலிங்கம் விமலாதேவி(22வயது), லிங்கேஸ்வரன் யனுசா(10வயது), லிங்கேஸ்வரன் தனுஜன்(8வயது) ஆகியோரும் செல்வராசா தேவராசா (42 வயது), முத்தையா ராசாத்தி (40 வயது), தே.குமார்(25 வயது), தே.சுமன்(15 வயது) மற்றும் தே.சிவேந்திரன் (17 வயது) ஆகியோரே கடத்தப்பட்டவர்களாவர்.

கருணாகுழுவின் முக்கிய உறுப்பினரான ருத்திரா மாஸ்டர் இந்த முகாமுக்கு பொறுப்பாக இருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ருத்திரா மாஸ்டருடன் தொலைபேசியில் பிள்ளையான் தொடர்பு கொண்டு அவர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு பதிலேதும் சொல்லாமல் ருத்திரா மாஸ்டர் தொலைபேசியை துண்டித்ததாகவும். முக்கிய தகவலொன்று தெரிவிக்கின்றது. பின்னர் பிள்ளையான் குழுவைச்சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கருணாகுழுவினருடன் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தும் செங்கலடி முகாமிலிருந்த கருணா குழு உறுப்பினர்கள் எந்தவிதமான பதிலையும் தரவில்லை என பிள்ளையான் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தற்பொழுதுவரை இவர்கள் எங்கிருக்கின்றார்கள் அல்லது அவர்களுடைய கதி என்ன என்பது பற்றி முயற்சிசெய்தும் எம்மால் எந்தத் தகவல்களும் அறிய முடியவில்லை.

No comments: