Saturday, 15 November 2008

மீனகம் அலுவலகம் கைப்பற்றியதன் எதிரொலி..!!

மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள மீனகம் அலுவலகம். இங்கேயே ரி.எம்.வி.பியினரின் தமிழ் அலை எனப்படும் மாதாந்த பத்திரிகை கடந்த இரண்டு வருடங்களாக வெளியிடப்பட்டு வருகிறது. முன்னர் கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பத்திரிகை கருணா லண்டன் சென்றபின்னர் பிள்ளையானின் கைகளுக்கு மாறியது. அன்றிலிருந்து பிள்ளையானின் பிரச்சார ஊதுகுழலாகவும் பிள்ளையானின் புகழ்பாடியும் இப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. கருணா தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்ட கருணாகுழு உறுப்பினர்கள் கருணாவின் தளபதி இனியபாரதியின் ஆலோசனையின்படி கருணாகுழு சிரேஸ்ட உறுப்பினராகிய ரஞ்சனின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் மேற்படி மீனகம் அலுவலகத்துக்குள் அத்துமீறி உட்புகுந்து அச்சகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களை நையப்புடைத்ததுடன் அச்சாகிக் கொண்டிருந்த பத்திரிகைக் கட்டுக்களையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
ஆனால் கருணாகுழுவினர் பத்திரிகை அலுவலகத்தை தாக்க வருகின்ற செய்தியை அறிந்து கொண்ட பிள்ளையானின் ஆதரவாளரும் தமிழ் அலையின் ஆசிரியர்பீட உறுப்பினருள் ஒருவருமாகிய ஜெயந்தன் அங்கிருந்த ஏனையோருடன் ஏற்கனவே அச்சாகியிருந்த பத்திரிகைகளை பிக்கப் வாகனமொன்றில் ஏற்றிக்கொண்டு தேனகத்திற்கு சென்றுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றியதைத் தொடர்ந்து கருணாவின் மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ரஞ்சன் தலைமையிலான கருணாகுழுவினர் மீனகத்தை கைப்பற்றினர்.
எனினும் தற்பொழுது மீனகத்தில் நிலைகொண்டுள்ள ரஞ்சன் தலமையிலான குழுவினருக்கும் அங்கிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் தேனகம் அலுவலகத்திலுள்ள பின்ளையான் குழுவினருக்குமிடையில் நேற்று மாலை நேரடித் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்துமளவுக்கு நிலமை மோசமடைந்ததுடன் அவ்வழியால் போக்குவரத்தில் ஈடுபட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீது இருதரப்பினராலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
உடனடியாக இச்சம்பவத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நிலைகொண்டுள்ள 533ஆவது படைப்பிரிவைச்சேர்ந்த சில முக்கிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மாலை 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அவ்விடத்துக்கு விரைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் இராணுவ பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதனால் கோவிந்தன் வீதி மக்கள் நடமாட்டத்துக்கு தற்பொழுது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: