Monday 2 March 2009

திருக்கோவில் பிரதேசத்தில் கருணாவின் அட்டகாசம்..!! அரசியல் இலாபம் தேடும் முயற்சி..!!

அம்பாறை மாவட்டம்- திருக்கோவில் பிரதேசத் தில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடம் இன்று கருணாவினால் திறந்து வைக்கப்பட்டு பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்ட மகிந்தவின் இணைப்பாளரும் கருணாவின் தளபதியுமான இனியபாரதியின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு கெடுபிடிக்குள்ளாகியிருந்தனர்.
இப்பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு சந்திரகாந்தன் நாட்டியிருந்ததுடன் இந்நிகழ்வில் வைத்தே இனியபாரதியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து இவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்கட்டிடமே இன்று கட்டப்பட்டு கருணாவினால் திறந்துவைக்கப்பட்டிருந்தது.
இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளும்பொருட்டு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் துப்பாக்கிமுனையில் கருணா குழுவினர் அச்சுறுத்தல் விடுத்திருந்ததுடன் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலாத்காரமாக வாகனமொன்றுக்குள் ஏற்றப்பட்டு இலங்கையின் சிங்கக்கொடியை நிகழ்வில் பிடித்துக்கொண்டு நிற்குமாறும் பணிக்கப்பட்டிருந்தனர். அலுவலகங்களில் வேலைசெய்யும் இளம்பெண்கள் துப்பாக்கிமுனையில் கொண்டுவரப்பட்டு கருணாவிற்கும் அவரது பிரதிநிதிகளுக்கும் மாலை அணிவிக்கப் பணிக்கப்பட்டனர்.
சுற்றுப்புற சூழலிலுள்ள மக்கள் அனைவரும் கருணா குழுவினரால் வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததுடன் நிகழ்வுக்கு வருகைதராதோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனியபாரதியின் குழுவினரால் நேற்று வீடுவீடாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இன்றுமாலை 4 மணியளவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் கருணாவினால் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் தாம் நிராயுதபாணிகளாய் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொள்ளப்போவதாகவும், சுதந்திரக் கட்சியின் கொடியே தமது கொடியெனவும் கருணாவினால் அறிவிக்கப்பட்டது. திருக்கோவில் பிரதேச சபை ஊறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலகவேண்டுமென்றும். இல்லாவிடில் தாம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுமெனவும் கருணாவினால் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் விரைவில் வேலையில்லாதோருக்கு தான் வேலை பெற்றுக்கொடுப்பதாகவும் கருணா தெரிவித்தார். இந்நிகழ்வை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசம் முழுவதும் நீலக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் கல்முனை – பாண்டிருப்பு எல்லைவீதியிலுள்ள பிரதர் ஹவுசில் கருணாவினால் ஊர்பொதுமக்களுக்கு பொதுக்கூட்டமொன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் வருகைதராதோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கருணாகுழுவினரால் வீடுவீடாகச் சென்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பாண்டிருப்பு எல்லைவீதி நீலக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இப்பகுதி பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்திலே இத்தகைய நிகழ்வுகளை இவர்கள் நடத்துவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தாம் நிராயுதபாணிகளாக அரசாங்கத்துடன் இணைவதாகக் கூறிக்கொண்டு ஆயுதமுனையில் அப்பாவி தமிழ்மக்களை துன்புறுத்திவருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

No comments: